கேபிள் டிவி சந்தா தொகை செலுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் உருவாக்கியுள்ள செல்பேசி செயலியை, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு கேபிள் டிவி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த செயலியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு கேபிள் டிவிக்கான மாத சந்தா செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி, ஆண்ட்ராய்டு உள்ள செல்போன்களில் இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை, கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து, பொதுமக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மாத சந்தா தொகையான 70 ரூபாயை சந்தாதாரர்கள் செல்போனிலிருந்தே செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை பயன்படுத்தி, ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியிலிருந்து, 10ஆம் தேதி வரை சந்தா தொகையை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி மாதம் 10ஆம் தேதிக்கு மேல் சந்தா தொகை செலுத்த விரும்புவோர், கேபிள் ஆப்ரேட்டர்களிடம் சந்தா தொகையை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சந்தா செலுத்தியவர்களுக்கு, சந்தா தொகை பெறப்பட்டுவிட்டது என்ற தகவல் SMSஆக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.