தமிழ்நாடு

புயல் - கனமழை பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு நேரில் வரவில்லை: மக்கள் புகார்

புயல் - கனமழை பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு நேரில் வரவில்லை: மக்கள் புகார்

Sinekadhara

தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் அஷதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழு வருகை தந்துள்ளது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு

முதல்நாளில் சென்னை வேளச்சேரி ராம்நகர் பகுதியில் ஆய்வைத் தொடங்கிய மத்திய குழுவினர், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி, செம்மஞ்சேரி சுனாமி காலணி, முடிச்சூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்லாமல், முகாம்களில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது தமிழக அதிகாரிகள், புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களைக் கொண்டு மத்திய குழுவுக்கு விளக்கமளித்தனர்.

முடிச்சூர் பகுதி மக்கள் தங்கள் பகுதிகளை அதிகாரிகள் நேரில்வந்து பார்வையிடுமாறு முறையிட்டபோது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பூந்தண்டலம், வெடால் பகுதிகளில் நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நிலங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் சாலையில் நின்றே கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துவிட்டு சென்றதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

வேலூர் ஆய்வு

இதுதவிர வேலூர் மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு செய்தபோது, திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி எம்.எல்.ஏவுமான துரைமுருகன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது பாதிப்பு குறைந்த பகுதிகளை ஆய்வு செய்வதைவிட பாதிப்பு அதிமுள்ள பகுதிகளை ஆய்வுசெய்யவேண்டும் என துரைமுருகனும் மத்திய குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இங்கு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும், பயிர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிவாரண நிதியானது மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அங்கு 2000 ஏக்கர் அளவில் சேதமடைந்த நெற்பயிர்கள், வாழை, பப்பாளி போன்ற பயிர்கள் மற்றும், மின்கம்பங்கள், குடிசைகள், கால்நடைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் புகைப்படம் மூலமாக விளக்கினார்.

புயல் கடந்த பகுதிகளான ஆரணி, அணைக்கட்டு, குடியாத்தம் பகுதிகளில்தான் நிவர் புயல் கடந்து சென்றதாகவும், அங்குதான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு மத்திய குழு நேரில் சென்று ஆய்வுசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் ஆய்வு செய்வது ஏற்கத்தக்கதாக அல்ல; வெறும் கண் துடைப்பாகவே இருக்கக்கூடும் என்று எம்.எல்.ஏக்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

புயல் மற்றும் மழைசேதம் தொடர்பான நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் 3758 கோடி ரூபாய் நிதி தேவையென தமிழக அரசு ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளது.

புதுச்சேரி ஆய்வு

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மத்திய குழு ஆய்வு நடத்தியது. புதுச்சேரி அரசு சார்பாக புயலால் ஏற்பட்ட சேதம் சுமார் 400 கோடி என மதிப்பிடப்பட்டது.முதலில் பாதிக்கப்பட்ட சாலைகளை ஆய்வுசெய்தனர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் வாழை, கரும்பு போன்ற பயிர்களை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட படகுகள் மற்றும் பகுதிகளை பார்வையிட்ட பின்பு, தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

தற்போது நிவர் புயலால் ஏற்பட்ட சேதத்தை மட்டுமே ஆய்வு செய்த அவர்கள், புரெவி புயல் சேதத்தை ஆய்வு செய்யவில்லை. எனவே முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.