தமிழ்நாடு

தேசிய திறனறித் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த கூலித் தொழிலாளி மகன்..!

தேசிய திறனறித் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த கூலித் தொழிலாளி மகன்..!

webteam

திருவாரூர் மாவட்டம் சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவன் தி. நவீன்குமார்,  தேசிய வருவாய்வழி  திறனறித் தேர்வில் (NMMS) 144 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். அந்த மாணவனை தன் அலுவலகத்திற்கு அழைத்துப் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

சென்ற 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் 2019 - 20 கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வு நடைபெற்றது.  தற்போது அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் திருவாரூர் மாவட்டத்தில்  143 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.  சேமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர் நவீன்குமார், 180க்கு 144 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

நவீன்குமாரின் பெற்றோர் தந்தை தியாகராசன், தாயார்  கலைச்செல்வி இருவரும் கூலி வேலை பார்க்கிறார்கள். கல்வியில் மெல்ல மலரும் மொட்டாக இருந்த நவீன், படிப்பில் சராசரி மாணவனாகவே இருந்திருக்கிறார். ஆனால், அவரை ஊக்கப்படுத்தி தலைமை ஆசிரியரும், பள்ளி ஆசிரியர்களும் மெல்ல உயரத்துக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.

இதனிடையே, திருவாரூர்  சேந்தமங்கலம்  பகுதியில் வசித்துவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர் வே.பாண்டியசேகரன், நவீன்குமாரின் சாதனையைப் பாராட்டி பத்தாயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கிப் பாராட்டியுள்ளார்.

“தேசிய திறனறித் தேர்வில் தேர்ச்சிபெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. விஞ்ஞானியாக வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றும் கூறும் மாணவர் நவீன்குமார், நம்பிக்கையும் தொடர் முயற்சியும் இருந்தால் சிரமத்தில் இருந்து சிகரத்துக்குச் செல்லமுடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

தேசிய திறனறித் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையில் நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.