திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் சௌந்தர பாண்டியன் - மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு சபரி வாசன் என்ற மகனும் சக்தி பிரக்யா என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் சக்தி பிரக்யாவுக்கு இரண்டரை வயது இருக்கும்போது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவர் அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தினந்தோறும் மகளின் நினைவுகளை கிரகிக்க முடியாமல் தவித்து வந்த தந்தை சௌந்தர பாண்டியன் தங்களது வீட்டு பூஜை அறையில் மகளின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து தினமும் வழிபட்டு வந்துள்ளார். மகளின் நினைவு என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என நினைத்து மூன்று வருடங்களுக்கு முன்பு ஆலயம் கட்டும் பணியினை தனது வீட்டிற்கு அருகில் அவர் தொடங்கியுள்ளார். ஆலய கட்டுமான பணி நிறைவடைந்து இன்று அதற்கான குடமுழுக்கு விழாவையும் அவர் வெகு விமர்சையாக நடத்தி இருக்கிறார்.
தனது மகளை அம்மனாக பாவித்து தனது குழந்தை சாயலில் அம்மன் சிலை வைத்து ஸ்ரீ சக்தி பிரக்யா அம்மன் என்கிற பெயரில் கோவில் எழுப்பி அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து குடமுழுக்கு நடத்தி உள்ளார். சௌந்தர பாண்டியனில் இந்த செயலை கண்டு வியந்த ஊர் மக்கள் ஒன்று கூடி இந்த ஆலய குடமுழக்கில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு செய்வது போன்று வேத விற்பன்னர்களை வைத்து யாகம் வளர்த்து ஆகம விதிமுறைபடி அவர் இந்த குடமுழுக்கை நடத்தியுள்ளார்.