Fake director pt desk
தமிழ்நாடு

“என் கணவர் இயக்குநர் என்று கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்” - போலீசில் பெண் புகார்!

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

webteam

செய்தியாளர்: மகேஸ் மாசிலாமணி

திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் பூர்ணிமா (41). இவர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 18 ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில்,

”ஏற்கனவே திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெற்ற என்னை குடியாத்தம் பகுதியை சேர்ந்த லட்சுமி காந்தன் என்பவர் திருமணம் செய்ய பெண் கேட்டதால் பெரியவர்கள் முன்னிலையில் கலசபாக்கத்தில் கடந்த 2016 ஆம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர், சினிமா டைரக்டர் என்றும், ஏற்கனவே சினிமா படம் தயாரித்து உள்ளதாகவும் கூறி என்னை சென்னைக்கு அழைத்துச் சென்றார்.

Complaint copy

சென்னையில் இருந்த போது என் கணவர் அடிக்கடி பல பெண்களிடம் போனில் பேசுவார், இரவு நேரத்தில் யார் போன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் என்னை அடித்து திட்டுவார். 5 வருடம் சென்னையில் இருந்த பிறகு திருவண்ணாமலையில் வீடு வாங்கலாம் என்று கூறி என்னை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து என்னை பெற்றோரின் வீட்டில் விட்டு விட்டு அடிக்கடி வந்து பார்த்து செல்வார். தற்போது என் கணவர் வேறுவொரு பெண்ணிடம் பேசுவதாக கேள்விப்பட்டு விசாரித்தேன். போது வேறுவொரு பெண்ணுடன் என் கணவன் குடும்பம் நடத்துவதாக தெரியவந்தது.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு தகாத வார்த்தையால் பேசி என்னை தாக்கினார். மேலும் என்னை ஏமாற்றியது போல் இதுவரை ஐந்து பெண்களை திரைப்பட இயக்குநர் என்று கூறி திருமணம் செய்துள்ளது தனக்கு தெரிந்தது.

இதையடுத்து என் கணவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறினார். சினிமா பட டைரக்டர் எனவும் நடிகர் அதர்வா மற்றும் சமந்தாவை முதன் முதலில் நடிக்க அறிமுகப்படுத்தியதாகவும் கூறி ஏமாற்றி வருவதாகவும் பூர்ணிமா குற்றம் சாட்டினார்.

Fake director

இது குறித்து விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் புகார் அளித்த பூர்ணிமா மற்றும் அவரது கணவர் லட்சுமி காந்தன் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.