தமிழ்நாடு

திருவண்ணாமலை: நள்ளிரவு வரை படிப்பு... தூங்கச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

திருவண்ணாமலை: நள்ளிரவு வரை படிப்பு... தூங்கச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

சங்கீதா

தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பள்ளி மாணவர் உயிரிழந்தநிலையில், மற்றொரு மாணவர் கவலைக்கிடமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் பேரூராட்சி அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் நடராஜன் - செல்வி தம்பதி. இந்தத் தம்பதியினருக்கு வினோத்குமார் (16), தினகரன் (15) என்ற இருமகன்கள் இருந்தனர். இதற்கிடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடராஜன் இறந்து விட்டார்.

இதனால் தாய் செல்வி கூலி வேலை செய்து தன்னுடைய 2 மகன்களை வளர்த்து வந்தார். மேலும் தற்போது பள்ளியில் பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால், வினோத்குமார், தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு வரையில் படித்து விட்டு விடியற் காலையில் தூங்க சென்றுள்ளனர்.

அப்போது, ஏற்கெனவே சேதமடைந்த மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், பள்ளி மாணவர்களான வினோத்குமார் மற்றும் தினகரன் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில், பலத்த காயமடைந்த வினோத்குமார், தினகரனை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு, போளுர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் முதலுதவி செய்யப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி தினகரன் என்ற மாணவர் பலியானார். வினோத்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தச்சம்பவம் குறித்து போளுர் காவல் துறையினர் வழக்குப் திவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச்சம்பவம் போளுர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.