திருவண்ணாமலையில், நிலத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோருக்கு உணவு கூட அளிக்காமல் தவிக்க விட்ட மகன்களிடம் இருந்து சொத்தை மீட்டு மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைத்துள்ளார் ஆட்சியர் கந்தசாமி.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவை சேர்ந்த 75 வயது விவசாயி கண்ணன் மற்றும் அவரது மனைவி பூங்காவனம் ஆகியோர் கடந்த 19-ஆம் தேதி ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் தங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை 7 ஆண்டுகளுக்கு முன்பே பழனி, செல்வம் ஆகிய இரண்டு மகன்களுக்கும் பிரித்து கொடுத்ததாகவும், நிலம் கிடைத்த உடன் தங்களுக்கு உணவு கூட அளிக்காமல் மகன்கள் துன்புறுத்துவதாகவும் எனவே தற்போது வாழ வழியின்றி தவிப்பதாகவும் கூறியிருந்தனர்.
இது தொடர்பான விசாரணைக்கு ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டார். அப்போது பழனி நிலத்தை வழங்குவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் மற்றொரு மகன் செல்வம் நிலத்தை வழங்க மறுத்தார். இதனை அடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ், இரு மகன்களுக்கு நிலத்தை வழங்கியதற்கான பத்திரப்பதிவை ஆட்சியர் கந்தசாமி ரத்து செய்தார்.
பின்னர் 2.12 ஏக்கர் நிலத்தை கண்ணன் பெயரிலும், 2.85 ஏக்கர் நிலத்தை பூங்காவனம் பெயரிலும் பதிவு செய்து அதற்கான பத்திரத்தை அவர்களிடம் ஒப்படைத்தார். இருவரும் ஆட்சியர் காலில் விழுந்து பத்திரங்களை வாங்கிச் சென்றனர். மகன்கள் ஏதேனும் பிரச்னை செய்தால் உடனே தெரிவிக்குமாறு அவர்களிடம் கூறிய ஆட்சியர் கந்தசாமி வயது முதிர்ந்த காலத்தில் பெற்றோரை பாதுகாப்பது மகன்களின் கடமை, பெற்றோரை தவிக்க விட்ட மகன்களுக்கு இது ஒரு பாடமாக அமையவேண்டும் என தெரிவித்துள்ளார்.