மாணவிகள் போராட்டம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

திருவள்ளூர்|‘எங்க சார் ரொம்ப நல்லவரு’ - போக்சோவில் கைதான ஆசிரியர்களுக்காக வீதியில் இறங்கிய மாணவிகள்!

2 ஆசிரியர்களை போக்சோவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் ஆவடி சாலையில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

PT WEB

திருவள்ளூர் அருகே அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, போக்சோவில் கைதான நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரி பள்ளி மாணவிகள், திருவள்ளூர் ஆவடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் பள்ளி மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு புகார்கள் சென்றது.

இதனைத்தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் செவ்வாப்பேட்டையில் உள்ள பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார்.

அப்போது அங்கிருந்த சில மாணவிகள் கணித ஆசிரியர் ஜெகதீசன், அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய 2 பேரும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் அறிக்கை பெறப்பட்டதை தொடர்ந்து, ஆதிதிராவிடர்நலத்துறை பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் மூலம் இது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து 2 ஆசிரியர்களும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்து 2 ஆசிரியர்களையும் போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

2 ஆசிரியர்களை போக்சோவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் ஆவடி சாலையில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 ஆசிரியர்களும் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர்கள் என்றும், வேண்டுமென்றே அவர் மீது பொய்யான புகார் கொடுத்து போக்சோவில் கைது செய்து இருப்பதால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் ஆவேசமாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதில், “எங்க சார் தப்பே பண்ணல. எத வச்சு தப்பு பண்ணாருனு சொல்றீங்க. இது தொடர்பா விசாரண ஒருநாளும் பண்ணல. நேத்து வந்து விசாரண பண்ணனு சொல்றாங்களே எல்லா கிளாசுக்கும் போனாங்களா. 10வது, 12வது வகுப்புக்கெல்லாம் வரவே இல்லை.

புகார் கொடுத்த 9 வகுப்பு மாணவிக்கு அவர் க்ளாஸ் எடுக்கவே இல்லை. நாங்களும் அவர்கிட்ட தான் படிச்சிட்டு வந்தோம். அவர்கிட்ட படிச்சிட்டு போனவங்களுக்கு அவருக்காக இங்க போராட வந்திருக்காங்க. அவர் அவ்ளோ நல்ல சாரு. எங்க சாரு திரும்பி வரணும். அவருக்கு வேலை கிடைக்கணும்” என்று மாணவி ஒருவர் பேசினார்.

இதனால் திருவள்ளூர் ஆவடி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.