தமிழ்நாடு

திருவள்ளூர்: துணி துவைக்கச் சென்ற 3 சிறுமிகள் உட்பட 5 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

திருவள்ளூர்: துணி துவைக்கச் சென்ற 3 சிறுமிகள் உட்பட 5 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

kaleelrahman

புது கும்மிடிப்பூண்டியில் கோவில் குளத்தில் துணி துவைக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள், 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள அங்காளம்மன் கோவில் குளத்தில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் வந்த சிறுமி ஒருவர் கால்தவறி குளத்தில் விழுந்து மூழ்கியுள்ளார். அங்கு துணி துவைத்து கொண்டிருந்த 2 பெண்கள், 2 சிறுமிகள் நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக குளத்திற்குள் இறங்கி 5 பேரும் சேற்றில் சிக்கி வெளியே வரமுடியாமல் மூழ்கினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிப்காட் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் மூழ்கிய 5 பேரை மீட்டனர். பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்தவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் 3 சிறுமிகள் உட்பட 5 பேரும் குளத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடைபெற்ற போலீசார் விசாரணையில் உயிரிழந்தவர்கள் அஸ்விதா (14), ஜீவிதா (14), நர்மதா (11), சுமதி (35), ஜோதிலட்சுமி (30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரின் சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துணி துவைக்கச் சென்ற போது ஒரே கிராமத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.