தமிழ்நாடு

"கட்சிப் பணி செய்தவர்கள் துரோகிகளா?" - வைகோவுக்கு மதிமுக மாவட்ட செயலாளர் கடிதம்

"கட்சிப் பணி செய்தவர்கள் துரோகிகளா?" - வைகோவுக்கு மதிமுக மாவட்ட செயலாளர் கடிதம்

JustinDurai

ம.தி.மு.க.வில் கேள்விகள் கேட்பவர்கள் துரோகிகள் என்றால் கட்சிக்காக பணி செய்தவர்கள் யார் எனக்கேட்டு வைகோவிற்கு அக்கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டிஆர்ஆர் செங்குட்டுவன் கடிதம் எழுதியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு அக்கட்சியில் அண்மையில் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு அக்கட்சியில் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் வைகோவுக்கு மதிமுகவின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர் செங்குட்டுவன் கடிதம் எழுதியுள்ளார். மதிமுகவில் கேள்வி கேட்கும் நபர்கள் துரோகி என்றால் கட்சிக்காக பணிகள் செய்தது யார் என அக்கடிதத்தில் செங்குட்டுவன் வினவியுள்ளார். தேர்தல் கூட்டணி போன்ற முக்கிய முடிவுகளை ஆட்சி மன்றக் குழுவை கூட்டி எடுக்காமல் வைகோ தன்னிச்சையாக எடுத்ததாக அக்கடிதத்தில் செங்குட்டுவன் விமர்சித்துள்ளார்.

கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் தேர்வில் துரை வைகோ தலையீடு இருந்ததாக சந்தேகம் தெரிவித்துள்ள செங்குட்டுவன், கட்சிப் பொறுப்பில் இல்லாத ஒருவர் வேட்பாளர் தேர்வில் எவ்வாறு ஈடுபட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் டிஆர்ஆர் செங்குட்டுவன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு - நிலவரம் என்ன?