செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு எட்டியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பட்டியலின மக்கள் தங்களுக்குச் சொந்தமான பாதையில் கோயிலுக்கு வரக் கூடாது என மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படாததால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சரவணன் என்பவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், பட்டியலின மக்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்ததாக வழுதலம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை, தேவராஜ், ரகுநாதன், சுப்பிரமணி, எட்டியப்பன், முருகன், முனுசாமி ஆகிய 7 பேர் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டம், சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.