இலவச அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காத பெண்ணிற்கு அபராதம் pt desk
தமிழ்நாடு

திருப்பூர்: பெண்களுக்கான இலவச அரசு பேருந்தில், டிக்கெட் எடுக்கவில்லையென பெண்ணிற்கு அபராதம்!

பல்லடத்தில் பெண்களுக்கான இலவச அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காததால் பெண் பயணிக்கு ரூ.200 அபராதம் விதிக்கபப்ட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்கு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர், தெற்கு பாளையம் பிரிவில் இருந்து புளியம்பட்டி செல்லும் பெண்களுக்கான இலவச பேருந்தில் பயணித்துள்ளார், அப்போது நடத்துனர் வரும்போது டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என்று அந்தப் பெண் காத்திருந்த நிலையில், அவர் வந்த பேருந்து, பஸ்ஸடாண்டிற்கு வந்துள்ளது.

இலவச அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காத பெண்ணிற்கு அபராதம்

அப்போது பேருந்தில் ஏறிய பரிசோதகர், நந்தினியிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு நந்தினி இன்னும் டிக்கெட் எடுக்கவில்லை என்று கூறியதை அடுத்து, டிக்கெட் இல்லாததால் பரிசோதகர் 200 ரூபாய் அபராதம் கேட்டுள்ளனர். அதற்கு நந்தினி, ‘விலையில்லா டிக்கெட்டை வேண்டுமென்றே வாங்காமல் இருப்பேனா? எதற்கு அபராதம் கேட்குறீர்கள்?’ என்று டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டுள்ளார். டிக்கெட் பரிசோதகர் வற்புறுத்தியதை அடுத்து பேருந்து நடத்துனரின் ஜிபே எண்ணிற்கு அபராத தொகை 200 ரூபாயை நந்தினி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பல்லடம் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் கார்த்திகேயனிடம் கேட்ட போது, “மகளிருக்கான இலவச பேருந்தில் ஏறினாலும் பெண்கள் அதற்கான சான்றாக டிக்கெட் பெற வேண்டும். ஏனெனில் அந்த டிக்கெட் கணக்கை ஒப்படைத்தால்தான் அதற்கான தொகையை அரசு எங்களுக்கு வழங்கும். அதை வைத்து எத்தனை பேருக்கு நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளது என்பதையும் அறிய முடியும்.

அப்படியிருக்கையில் அந்த பெண் டிக்கெட் எடுக்காததால் அபராதம் விதிக்கப்பட்டு, அந்த தொகை முறையாக அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ளது. மகளிர், தங்களுக்கான இலவச டிக்கெட்டை பெறுவது அவசியம். பெறாமல் இருந்தால், அபராதம் விதிப்பதுதான் முறை” என்றார்.