துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு puthiya thalaimurai
தமிழ்நாடு

திருப்பூர்: துப்பாக்கியுடன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் - காரணம் என்ன?

திருப்பூரில் துப்பாக்கியுடன் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: சுரேஷ் குமார்

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இதை தடுக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் அனைவரும் கை துப்பாக்கியுடன் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவு பிறப்பித்தார்.

அபிஷேக் குப்தா

முன்னதாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடந்த 28ம் தேதி அடுத்தடுத்த 4 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதில் ஈடுபட்ட நபர்கள் கடப்பாரை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அதே போல் காங்கேயம் பகுதியில் அடுத்தடுத்து 6 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது போன்ற தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இரவு ரோந்து பணியை மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தவும், காவலர்களை அதிகரித்து அனைத்து காவலர்களிடமும் கை துப்பாக்கி வழங்க காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கியுடன் இரவு ரோந்து பணி

அதன்படி திருப்பூர் மாவட்டம் அவிநாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, வெள்ளகோவில், மடத்துக்குளம் உள்ளிட்ட 24 காவல் நிலையங்களில் பணியாற்றும் 300 காவலர்கள் நேற்று இரவு கை துப்பாக்கியுடன் ரோந்து பணி மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதுடன் வாகன சோதனையும் செய்து வருகின்றனர்.