Kovil festival pt desk
தமிழ்நாடு

திருப்பூர்: கோவில் கட்ட இடம் வழங்கி, சீர்வரிசையுடன் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் மாவட்டம் படியூர் அடுத்த ஓட்டப்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் விநாயகர் கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதற்கு போதுமான இடம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள ஆர்எம்ஜே ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்குச் சொந்தமான மூன்று சென்ட் நிலத்தை இஸ்லாமியர்கள் கோவிலுக்கு வழங்கினர்.

Kovil festival

இதனைத் தொடர்ந்து அங்கு கோவில் கட்டும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து ஐந்து தட்டுகளில் சீர் வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வழங்கினர். மேலும் கோவில் விழாவில் அன்னதானம் செய்யவும் இஸ்லாமியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த செயல் அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைந்திருப்பதாகவும், இதே ஒற்றுமையுடனும், அன்போடும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கரம் நீட்டுவோம் எனவும் அப்பகுதியில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.