மணிமேகலை  PT WEB
தமிழ்நாடு

"யாசகம் பெற்ற பணம் சார்" - ரூ.1.50 லட்சம் பணத்துடன் மதுபோதையில் தள்ளாடிய பெண்!

திருப்பூரில், மது போதையில் சுற்றித் திரிந்த பெண்ணிடம் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமல் ராஜ்

செய்தியாளர் - சுரேஷ்குமார்

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நல்லூர் சர்ச் அருகே நேற்று மாலை 36 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் மது போதையில் தள்ளாடிய படி, சேலையில் சுற்றப்பட்டிருந்த மூன்று கட்டு பணத்துடன் சுற்றித் திரிந்துள்ளார். அதே சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த கடைக்காரர்கள் , "மது போதையில் தள்ளாடும் அந்த பெண் அதிகப் பணம் வைத்துள்ளார்" என போலீசாரிடம் கூறியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

இதனையடுத்து அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் சோதனை நடத்தியதில், உரிய ஆவணம் இல்லாமல் அவர் 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்திருந்தருந்தது தெரியவந்தது. அதை உடனடியாக போலீசார் பறிமுதல் செய்து, மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், துறையூர் திருமானூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மணிமேகலைதான் (36) இவர் என்பது தெரியவந்தது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பண்ணாரி அம்மன் கோவிலுக்குச் சென்று யாசகம் பெற்ற பணம்தான் இது என போலீஸிடம் மணிமேகலை தெரிவித்தார்.

யாசகம் பெற்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை

இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைக் கருவூலத்திற்கு அனுப்பி வைத்து விட்டு, அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள காப்பாத்திற்க்கு அனுப்பி வைத்தனர்.