தமிழ்நாடு

மாஸ்க் அணிவது கட்டாயம் : திருப்பூர் ஆட்சியர் உத்தரவு

மாஸ்க் அணிவது கட்டாயம் : திருப்பூர் ஆட்சியர் உத்தரவு

webteam

வெளியே வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 1173 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. சென்னையில் 205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சிகள் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

சென்னையில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு நபரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி நேற்று உத்தரவிட்டது. தொற்று நோய் தடுப்பு சட்டம் மற்றும் பொது சுகாதார சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி முகக்கவசம் இன்றி வருவோருக்கு, வெளியே செல்லும் அனுமதி உரிமம் பறிக்கப்படும் என்றும், அத்துடன் 3 மாதங்களுக்கு அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.