திருப்பூர் மாவட்ட ஆட்சியர் PT Desk
தமிழ்நாடு

‘10th Fail ஆகி படிச்ச நானே கலெக்டர் ஆகிட்டேன்...’- தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு ஆட்சியர் அட்வைஸ்!

பத்தாம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு அறிவுரை வழங்கினார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்.

PT WEB

பல்லடம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை எனவும் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் தவித்து வருவதாகவும் எழுந்த புகாரினை தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பல்லடம் அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்

மருத்துவமனையின் முதலுதவி சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சிறப்பு சிகிச்சை பகுதி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும் அவர்களின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது அங்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அனீஸ் என்ற பள்ளி மாணவன் அனுமதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறார். சிறுவன் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என இவர் கேட்கவே, பத்தாம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை முயற்சி மேற்கொண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான் என்று உடனிருந்தவர்கள் கூறியுள்ளார்கள்.

பல்லடம் அரசு மருத்துவமனை

அந்த மாணவனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் அந்த மாணவனிடம் “பத்தாவதில் ஃபெயில் ஆகி படித்த நானே மாவட்ட கலெக்டர் ஆகிட்டேன். உன்னால முடியாதா? இன்னும் நல்லா படிச்சி 12ஆம் வகுப்புல நல்ல மார்க் எடுக்கணும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு அலைபேசியில் அழைத்து கண்டிப்பாக உன் மதிப்பெண்ணை சொல்ல வேண்டும். நானும் உன்னை மாதிரி வாலிபால் பிளேயர் தான்... நல்லா விளையாடு! உன்னுடைய பள்ளி தலைமை ஆசிரியரிடம் நானே பேசுகிறேன். எதை பற்றியும் கவலைப்படாதே. உறுதியோடு படி” என மாணவனுக்கு மன வலிமை ஏற்படுத்தும் வகையில் அறிவுரை வழங்கினார்.

ஆட்சியரின் வார்த்தைகள், அங்கிருப்போரை நெகிழச்செய்தது. மேலும் தன்னம்பிக்கையும் ஊட்டியது. மாணவனின் பெற்றோரும் ஆட்சியரின் செயலால் நெகிழ்ந்துபோயுள்ளனர்.

தொடர்ந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் கழிப்பிட வசதி இல்லாததால் பேருந்து நிலையம் வரை நோயாளிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், சித்தா பிரிவு அறை இருக்கும் இடத்திற்கு வழிகாட்டி பதாகைகள் வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தலைமை மருத்துவருக்கு உத்தரவிட்டுள்ளார்.