ஒரே அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்ட இரண்டு சடலங்கள் pt desk
தமிழ்நாடு

திருப்பூர்| ஒரே அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்ட இரண்டு சடலங்கள் - வீடியோ வைரலான நிலையில் டீன் விளக்கம்

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாண்டி பிரபு என்ற நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பிரேத பரிசோதனை முடித்து வடக்கு காவல் நிலைய காவலரிடம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து பாண்டி பிரபு உடலை அமரர் ஊர்தியில் ஏற்றியுள்ளனர். அப்போது அமரர் ஊர்தியில் இரண்டு உடல்கள் ஏன் ஏற்றினீர்கள் என பண்டி பிரபுவின் தந்தை துரைராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

டீன் முருகேசன் விளக்கம்

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசன் புதிய தலைமுறைக்கு பிரத்தியேகமாக விளக்கம் அளித்துள்ளார். அதில் பாண்டி பிரபுவின் உடல், பிரேத பரிசோதனை முடித்து வடக்கு காவல் நிலைய காவலருக்கு தகவல் அளித்தவுடன் அவர் அமரர் ஊர்தி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அழைத்திருக்கிறார். அதன் பின்னர் பாண்டி பிரபு உடல் அருப்புக்கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது செல்லும் வழியிலேயே விருதுநகருக்கு மற்றொரு உடல் கொண்டு செல்ல வேண்டும் என வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து அதே வாகனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து திரும்பி வந்து மற்றொரு உடலை ஏற்றும்போது பாண்டி பிரபுவின் தந்தை ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்து தனி வாகனம் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தோம் என விளக்கம் அளித்துள்ளார்.