தமிழ்நாடு

திருப்பூர்: ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக-வினரால் தாக்கப்பட்ட தள்ளுவண்டி வியாபாரி-ஒருவர் கைது

திருப்பூர்: ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக-வினரால் தாக்கப்பட்ட தள்ளுவண்டி வியாபாரி-ஒருவர் கைது

நிவேதா ஜெகராஜா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 58). இவர் பல்லடம் பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்து வருகிறார். நேற்று திருப்பூரில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட சலசலப்பில், பாஜக-வினரால் இவர் தாக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை தாக்கிய பாஜக பிரமுகர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடிக்கு, அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக பிரதமர் மோடி, மேம்பாலத்தின் மீது 20 நிமிடங்கள் காத்திருந்து, பின் பயணத்தை ரத்து செய்துவிட்டு ஊர் திரும்பினார். பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை கண்டிக்கும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க சார்பில் கடந்த ஒரு வாரமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க சார்பில் மனிதசங்கலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது சாலை ஓர தள்ளுவண்டி வியாபாரி முத்துச்சாமி பிரதமர் மோடியை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலையோர வியாபாரியுடன் வாக்குவாதம் செய்ததோடு அவரை தாக்கவும் முற்பட்டுள்ளனர். உடனடியாக வியாபாரி அருகில் இருந்த செல்போன் கடைக்குள் ஓடியுள்ளார். இருப்பினும் கடைக்குள் புகுந்த பா.ஜ.க வினர் சாலையோர வியாபாரி முத்துச்சாமியை சரமாரியாக தாக்கினர்.

இதைக்கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க வினரை தடுத்து , தாக்குதல் நடத்தியவர்களையும், தாக்கப்பட்டவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரனையின் போது, வியாபாரி தரப்பில் “ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகும் கூட்டம் கூடி நின்றதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறதென்று, அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினேன். அதற்காக என்னை தாக்கினார்கள். மற்றபடி பிரதமர் மோடி குறித்து அவதூறாக எதுவும் கூறவில்லை” என வியாபாரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் பாஜக தரப்பில், அவர் பிரதமரை இழிவாக பேசினார் என சொல்லப்பட்டது.

இரு தரப்பு புகாரையும் பெற்று கொண்ட பல்லடம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாபாரி முத்துச்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.கவை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், பாஜக இளைஞரணி நிர்வாகி வடுகபாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். மற்ற 6 பேரை தேடி வருகின்றனர். இதேபோல பாஜக வினர் அளித்த புகாரின் அடிப்படையில் வியாபாரி முத்துசாமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.