தமிழ்நாடு

திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!

திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!

kaleelrahman

திருப்பூரில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கயிறுகட்டி இழுத்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வங்கி ஏடிஎம் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச்சென்றது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது ஏ.டி.எம் இயந்திரத்தை கயிறு மூலம் காரில் கட்டி வெளியே இழுத்துச் சென்றுள்ளனர்.


இதைத் தொடர்ந்து தற்போது, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர் இந்நிலையில் கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தை பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தில் விட்டுவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை மட்டும் வண்டியில் எடுத்துச் சென்றுள்ளனர். கடந்த 19ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்தில் 15 லட்சம் ரூபாய் வைத்ததாகவும் நேற்றைய தினம் வரை குறைந்த பட்சமாக ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருந்திருக்கலாம் என வங்கி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வங்கி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து நான்கு சக்கர வாகனத்தில் கயிற்றைக் கட்டி ஏடிஎம் இயந்திரத்தை வாசல் வரை இழுத்துவந்து பின்பு வாகனத்தில் ஏற்றி சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கும்போது திருப்பூர் ஈரோடு செல்லும் முக்கிய பிரதான சாலையில் ஏடிஎம் செயல்பட்டு வருவதாகவும் ஆனால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் வங்கி நிர்வாகம் சார்பில் சரிவர மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த இரண்டு வருடமாக இந்த ஏடிஎம் மையத்திற்கு இரவு நேர காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/qWwHRhDPTUc" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>