தமிழ்நாடு

“பள்ளிக்கு உள்ளே விடுங்க” - ஏழை மாணவனின் ஏக்கக் குரல்!

“பள்ளிக்கு உள்ளே விடுங்க” - ஏழை மாணவனின் ஏக்கக் குரல்!

webteam

திருப்பூரில் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவன், பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த பழனிக்குமார் என்பவரது மகன் காந்திஜி. ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, கட்டாய இலவசக் கல்விச்சட்டத்தில் பழனி தனது மகனை சேர்க்க முடிவெடுத்தார். அதன்படி, அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தனது மகனை சேர்த்துள்ளார். கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதும், ஒன்றாம் வகுப்பிற்கு சென்றுள்ளார் மாணவர் காந்தி. அவரிடம் பள்ளி தொடங்கியது முதலே ரூ.20 ஆயிரம் கட்டணத்தை பெற்றோரிடம் பெற்று வருமாறு ஆசிரியர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பள்ளி வந்த மாணவனை, ரூ.20 ஆயிரம் கேட்டு வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பியுள்ளது நிர்வாகம். மாணவர் நடந்ததை சென்று தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனே பள்ளிக்கு புறப்பட்டு வந்த மாணவரின் தந்தை, தனது மகன் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின் கீழ் படிப்பதை கூறியுள்ளார். மேலும் மாணவரை வகுப்பறையில் சேர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பணம் கட்டாவிட்டால் மாணவரை சேர்த்துக்கொள்ள முடியாது எனது மறுத்துவிட்ட பள்ளி நிர்வாகம், உரிமையை கேட்ட பழனியிடம் வாக்குவாதம் செய்து  வெளியேற்றியுள்ளது. அத்துடன் அவரின் இருசக்கர வாகனத்தின் சாவியையும் பறித்துக்கொண்டது.

பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து என்ன செய்வதென்று தெரியாத தந்தையும், அவரது மகனும் ஒன்றாம் வகுப்பு மாணவருமான காந்தியும் பள்ளிக்கு வெளியே நின்று நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழை மாணவருக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு அப்பகுதியில் சென்றவர்கள் சிலர் அவர்களுடன் சேர்ந்து நின்றனர். மாணவர் காந்தி தனது எழுது பலகையில் “பள்ளிக்கு உள்ளே விடுங்க” என எழுதி, கையில் ஏந்தி நின்றார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அரசின் சட்டங்கள், அதிகாரம் உள்ளவர்களுக்கு தான் சாதகம் என்று குறை கூறினர். மேலும் ஏழை மாணவன் படிப்பு அரசு அதிகாரிகளும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாந்தியிடம் கேட்டபோது, கல்விக்கட்டணம் மட்டுமே அரசு செலுத்தும் எனவும், பள்ளி விதிமுறைகளின்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.