தமிழ்நாடு

மாற்றி யோசித்த மாற்றுத்திறனாளி: ஆட்டோவை சொகுசு காராக மாற்றி பயணம்

மாற்றி யோசித்த மாற்றுத்திறனாளி: ஆட்டோவை சொகுசு காராக மாற்றி பயணம்

kaleelrahman

போலியோவால் ஒரு கால் செயலிழந்த நிலையில் தன்னம்பிக்கை இழக்காத மாற்றுத்திறனாளி ஒருவர் தனது கார் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஆட்டோவை சொகுசு கார் போல மாற்றி வடிவமைத்து அசத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ரங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (46). 5 வயதில் போலியோவால் ஒரு கால் செயலிழந்து மாற்றுத் திறனாளியான இவர், கடந்த 15 ஆண்டு காலமாக அவிநாசியில் உள்ள இரும்புக் கடைகளில் தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை ஓட்டிவருகிறார்.

அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தனது மனைவி சகுந்தலா (38), மகன் ஆரோன் (21), தாய், தந்தை, சகோதரர்கள் என 12 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். தனது குடும்பத்தினர் தனக்கு கொடுத்த ஊக்கம் மற்றும் உதவியின் காரணமாக சொந்தமாக மூன்று சக்கர சரக்கு ஆட்டோ வாங்கி கடின உழைப்பால் பிழைக்க வந்த ஊரில் சொந்தமாக வீடு, சரக்கு ஆட்டோக்கள் வைத்து தொழில் என முன்னேற்றப் பாதையில் வீரநடை போட்டு வருகிறார்.

அயராமல் உழைத்து நல்ல நிலைக்கு வந்த அருணுக்கு சொந்த காரில் குடும்பத்துடன் வலம்வர வேண்டும் என்ற ஆசை உருவானது. மாற்றுத்திறனாளியான தன்னால் கார் ஓட்ட முடியாது என தெரிந்தும் சோர்ந்து போகாமல் தீவிரமாக யோசித்து ஆட்டோவை சொகுசு காராக மாற்ற முடிவெடுத்து, அப்பணியை திறம்பட செய்யும் பணிமனை எது என தேடத் துவங்கினார்.

அப்போது கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உப்பளா என்ற ஊரில் ஆட்டோக்களை சொகுசு ஆட்டோக்களாக வடிமைத்து தரும் நிறுவனத்தை தேர்வு செய்தார். இதையடுத்து உடனடியாக இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு புதிதாக ஆட்டோவை வாங்கி அந்த நிறுவனத்தின் வல்லுநர்களை கொண்டு தனது ஆட்டோவை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் சொகுசு ஆட்டோவாக மாற்றினார்.

இந்த சொகுசு ஆட்டோவில், குஷன் இருக்கைகள், பக்கவாட்டு கதவுகள், பவர் விண்டோ, அகமும் புறமும் பல வண்ணங்களில் எல்.இ.டி விளக்குகள், உட்புற அலங்காரம், முகப்பு விளக்கு வடிவமைப்பு, டிவி, பேன், வெண்டிலேட்டர், பின்புற புகை போக்கி என சொகுசு காரில் உள்ள பெரும்பாலான அம்சங்களையும் ஆட்டோவில் கொண்டு வந்துள்ளார்.

இந்த சொகுசு ஆட்டோவில் குடும்பத்துடன் செல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அருண் நெகிழ்ச்சியாக சொல்லி பூரித்தார்.