தமிழ்நாடு

ஜோசியரைக் கொன்ற நபருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

ஜோசியரைக் கொன்ற நபருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

webteam

திருப்பூர் கிளி ஜோசியரைக் கொலை செய்த வழக்கில் சரணடைந்த நபரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து  காவல்துறையினர் சிறையில்  அடைத்துள்ளார்.

திருப்பூர் குமரன் சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்து சென்றுகொண்டிருந்த கிளி ஜோசியர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த ரகு என்பவர் அரிவாளால் சரமாரியாக ஜோசியரை வெட்டிக்கொன்றார். அதன் பின்னர் பொதுமக்களுக்கு சாவகாசமாக துண்டுப் பிரதிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். 

அவர் வழங்கிய துண்டுப் பிரதியில் ஜோசியர் ரமேஷ், பூங்கா பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக கிளி ஜோதிடம் பார்த்துவந்துள்ளதாகவும், அங்கு வரும் பெண்களையும், காதலர்களையும் கண்காணித்து தீயசக்தி மூலம் பிடித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து தப்பிச் சென்ற ரகுவை காவல்துறையினர் தேடி வந்தனர். விசாரணையில் மூடத்தனத்தின் உச்சத்தில் ரகு இருப்பது தெரியவந்தது. நாகை குத்தாலம் பகுதியைச் சேர்ந்த ரகு, 9 ஆண்டுகளுக்கு முன் மற்றொருவரின் மனைவி ப்ரியாவை வசியம் செய்து தரும்படி, ஜோதிடர் ரமேஷை அணுகியுள்ளார். ஜோதிடர் ரமேஷும் பணம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு வசியம் செய்ய மாந்திரீகம் செய்துள்ளார்.

அதன் பின்னர் ப்ரியாவுடன் இணைந்து வாழத் தொடங்கியதால், அதற்கு ஜோதிடரின் மாந்திரீகமே காரணம் என நம்பியுள்ளார் ரகு. ஆனால், இந்த உறவு நீடிக்காமல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முறிந்துபோனது. இந்நிலையில் ப்ரியா காணமால் போக, அதற்கு காரணம் ரமேஷ்தான் என நினைத்து ரகு அவரை கொன்றுள்ளார். 

ரகுவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் சென்னைக்கு தப்பி வந்தார். அத்துடன் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ரகு சரண் அடைந்தார். திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  ஜனவரி 10 ஆம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவரை இன்று திருப்பூர் நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கவியரசன், ரகுவை 15 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து ரகு கோவை மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச்செல்லும்போது, அவர் கண் கலங்கியவாறே சென்றார். பின்னர் அவரைக் காவலர்கள் சிறையில் அடைத்தனர்.