தாராபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண் ஒருவர் டாஸ்மார்க் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மது வாங்க வரும் நபர்கள், மதுவை வாங்கி அண்ணாநகர் பகுதிக்குச் செல்லும் சாலையில் அமர்ந்து அருந்துவதோடு அங்கு செல்லும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதும் தகாத வார்த்தைகளை பேசுவதும் தொடர் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அண்ணாநகர் பகுதியில் வசித்துவரும் சமூக ஆர்வலர் செல்வராணி என்பவர் இன்று அரசு மதுபான கடை வழியாக சென்றபோது அவரை வழிமறித்த போதை ஆசாமிகள், தகாத வார்த்தையில் திட்டி, மதுபாட்டில்களை உடைத்து செல்வராணியை குத்த முயன்றதாக கூறப்படுகிறது. அவர் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி வந்து அதே மதுக்கடையின் முன்பு அமர்ந்து மதுக்கடையை அப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டுமென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட செல்வராணியுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அப்பகுதியில் செயல்படும் மதுக்கடையை அகற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து செல்வராணி அங்கிருந்து சென்றார். இதனால் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் சாலையில் மக்கள் கூடி வேடிக்கை பார்த்ததால் ஒருமணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.