திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, அரை அடி அளவிற்கு மண்ணுக்குள் புதைந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டிபாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த 2018ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 29.3 கோடி ருபாயில் இந்த பணிகள் ஆரம்பித்த போதே அப்பகுதி மக்களால் பல்வேறு எதிர்ப்புகளுக்கு உள்ளானது.
ஆண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள 70 ஏக்கர் பரப்பளவிலான குளத்திற்கு நேர் எதிரே தான் இந்த இடமும் அமைந்துள்ளது. 1910 ஆம் ஆண்டு அரசு ஆவணங்களின்படி இந்த இடம் நீர்நிலையாக உள்ளது என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டத்தை பயன்படுத்தி அரசு ஆவணங்களில் இது நீர்நிலை அல்ல என மாற்றி இப்போது அரசு கட்டிடம் கட்டுப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் இன்று காலை மழை காரணமாக இந்த கட்டிடத்தின் ஒருபகுதி அரை அடி அளவில் மண்ணுக்குள் புதைந்தது. இதையடுத்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் கிரந்தி குமார் தொழில்நுட்ப வல்லுநர் குழுவை வைத்து ஆய்வு செய்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் ஒப்பந்ததாரர் அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு மீண்டும் புதிய கட்டிடம் கட்டித் தருவதாக கூறியதை அடுத்து தற்போது அந்த கட்டிடத்தை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மண்ணுக்குள் புதைந்த இந்த கட்டிடம் ஏன் இப்படி உறுதித் தன்மையை ஏற்று இருந்தது எதனால் மண்ணுக்குள் புதைந்தது என்பன போன்ற விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.