தமிழ்நாடு

திருப்பத்தூர்: பொங்கல் ஸ்பெஷல்... மக்கள் வெள்ளத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு

திருப்பத்தூர்: பொங்கல் ஸ்பெஷல்... மக்கள் வெள்ளத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு

kaleelrahman

வாணியம்பாடி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் குவிந்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காளைகளும் ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகளும் இப்போட்டியில் கலந்துகொண்டன.

இப்போட்டியில், குறுகிய நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை எட்டும் காளைக்கு முதல் பரிசாக 70,000 ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் போட்டியை கண்டுகளிக்க வெள்ளக்குட்டை கிராமத்தில் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


இந்த போட்டியில் வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவருக்கு சொந்தமான காளை மாடு முதல் பரிசான 70 ஆயிரம் ரூபாய் வென்றது. இரண்டாம் பரிசு திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த அருண் என்பவருக்கு சொந்தமான காளைமாடு 55 ஆயிரம் ரூபாயை வென்றது. மூன்றாம் பரிசு பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் சொந்தமான காளை 40,000 ரூபாய் பரிசுத் தொகையை வென்றது.


வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வருவாய்த் துறையினர், ஆலங்காயம் வட்டார அலுவலர் பசுபதி தலைமையில் மருத்துவ குழு மற்றும் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.