மத்திய மாநில அரசுகள் உதவி கோரி தாய் கண்ணீர் pt desk
தமிழ்நாடு

திருப்பத்தூர் | அரியவகை முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை! உதவிகோரி தாய் கண்ணீர்!

முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை காப்பாற்றக் கோரி தமிழக அரசிடம் தாய் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: சுரேஷ்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் கருணாகரன் - மணிமேகலை தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை முதுகெலும்பு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் பலனின்றி 10 மாதங்களில் உயிரிழந்துள்ளது.

முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை

இதனைத் தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு குகன் என பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில், திடீரென இந்தக் குழந்தைக்கும் அதே முதுகெலும்பு தசைச் சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்றபோது SMA Type1 என்ற இந்த அரிய வகை நோய்க்கு மருந்து வெளிநாட்டில் இருந்து வரவழைக்க வேண்டி உள்ளது எனவும் அதற்கு பல கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

கூலித் தொழிலாளியான கருணாகரன் மணிமேகலை தம்பதியினர் தங்களது குழந்தையை காப்பாற்ற வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதே போன்று முதுகெலும்பு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசின் மூலம் வெளிநாட்டில் இருந்து மருந்து வரவழைக்கப்பட்டு குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குழந்தையுடன் ;சோகத்தில் தாய்

இதையடுத்து தங்களுடைய முதல் குழந்தை இதே நோயால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில் தற்போதுள்ள இரண்டாவது குழந்தையாவது காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.