தமிழ்நாடு

 “4 கி.மீ சுற்றி சென்றாலும் ஊருக்குள் பேருந்து வருவதில்லை” - கிராம மக்கள் வேதனை 

 “4 கி.மீ சுற்றி சென்றாலும் ஊருக்குள் பேருந்து வருவதில்லை” - கிராம மக்கள் வேதனை 

webteam

நெல்லை மாவட்டம் தெற்குப்பட்டி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலத்தை மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் இடித்ததால் ஊருக்குள் போக்குவரத்து வசதி முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

நெல்லை மாவட்டம் மானூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தெற்குப்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு பாசனக்கால்வாய் தரைப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். பள்ளிக்கோட்டை கால்வாய் மூலம் நெட்டூர், அருணாச்சலப்பேரி, சம்மன்குளம், கங்கை கொண்டான் வரை பல்வேறு கிராமங்களில் பாசன வசதி நடைபெறுகிறது. 

இந்த நிலையில், பாசனக் கால்வாய் மீது கட்டப்பட்ட தரைப்பாலம் பழமையானதால் அதனை கடந்த 2 மாதத்திற்கு முன்பு இடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊருக்குள் செல்ல வேறு எந்த மாற்று வசதியும் செய்து தரவில்லை என்றும், இதனால் தங்களது கிராமத்திற்கு போக்குவரத்து வசதியானது முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனி தீவு போல மாறி உள்ளது எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் பாசன கால்வாயில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும், 4 கிலோ மீட்டர் தூரம் பேருந்து சுற்றி சென்றாலும் ஊருக்குள் வருவதில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் இரவு நேரங்களில் மிகுந்த சிரமம் அடைவதாகவும் பாலத்திற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இன்னும் ஓரிரு நாட்களில் பாசன கால்வாயில் தண்ணீர் வரத்தை குறைத்து பேருந்து ஊருக்குள் செல்லுமாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.