பல்வீர் சிங் pt desk
தமிழ்நாடு

பல்வீர் சிங் விவகாரம் - நெல்லை நீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

செய்தியாளர்: மருதுபாண்டி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கி காவல்துறையினர் சித்திரவதை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர் கடந்த ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி விசாரணை நடத்தினார்.

Amudha IAS, Balveer singh

இந்நிலையில் அப்போதைய அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி தனது முதல் கட்ட விசாரணையும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரண்டாம் கட்ட விசாரணையையும் நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி மற்றும் ஏடிஎஸ்பி சங்கர் ஆகியோர் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டார். இதில், வேத நாராயணன், சூர்யா, வெங்கடேசன் மற்றும் அருண்குமார் ஆகியோரின் புகார்களின் பேரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 காவல்துறை அதிகாரிகள் மீது குற்றத்தில் முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீசாரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

balveer singh

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே ஏஎஸ்பி பல்வீர் சிங்-கின் பணியிட நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் உட்பட 15 காவல்துறை அதிகாரிகளும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் இந்த வழக்கை வருகிற பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தொடர்ந்து பல்வீர் சிங்கின் வழக்கறிஞர் துரைராஜ் இதுகுறித்து நம்மிடையே பேசுகையில், “குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது, முற்றிலும் சட்டப்படி சரியானதே. புகார் கொடுத்த அனைவருமே விசாரிக்கப்பட்டு அதனடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே புகார்தாரர்களை மிரட்டுவதற்கான வாய்ப்புகள் கிடையாது.

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற காவல்துறை அதிகாரிகளும் இதுவரை பணியில்தான் இருந்து வருகின்றனர்” என தெரிவித்தார்.