தமிழகத்தின் வற்றாத ஜீவ நதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது சமீபகாலமாக அதிகரித்து இருப்பதால் ஆற்றில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர பகுதிகளில் சரியான திட்டமிடல் இல்லாமல் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தால் வீடுகளில் இருந்து நேரடியாக கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது.
இது தவிர மாநகர பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்தும் கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. இது குறித்து புதிய தலைமுறையில் களஆய்வு செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி இன்று தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடங்களை அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு பணிகள் குறித்து ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ”தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக பல நாட்களாக புகார் உள்ளது. எனவே அதை தடுக்க மாநகராட்சி சார்பில் 295 கோடி மதிப்பில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். 90% மன்ற பணிகள் முடிவு பெற்றுள்ளது. சின்ன சின்ன வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால் அவர்கள் மழைநீர் வடிகால் மூலம் கழிவுநீரை நேரடியாக ஆற்றில் விடுகின்றனர்.
அதை தடுப்பது சவாலாக இருக்கிறது. அது குறித்து சர்வே செய்து வருகிறோம். மேலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க ராட்சத சம்ப் அமைத்து கழிவுநீரை சேகரிக்க திட்டமிட்டுள்ளோம். மீனாட்சிபுரம், கைலாசபுரம், உடையார்பட்டி, சிந்துபூந்துறை ஆகிய நான்கு இடங்களில் அதிக அளவு கழிவுநீர் கலக்கிறது. இது தவிர 16 இடங்களில் சின்ன சின்ன குழாய்கள் வழியாக கழிவுநீர் கலக்கிறது. அதிக கழிவு நீர் கலக்கும் நான்கு இடங்களில் ராட்சத சம்ப் அமைத்து அதில் கழிவுநீரை சேகரித்து பின்னர் அங்கிருந்து பம்பு மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரண்டு மாதங்களில் இந்த பணிகள் முடிவடையும்” என தெரிவித்தார்.