வைர வேலுடன் காட்சியளித்த ஜெயந்திநாதர் pt desk
தமிழ்நாடு

திருச்செந்தூர் | கந்த சஷ்டி விழா - 40 வருடங்களுக்குப் பிறகு வைர வேலுடன் காட்சியளித்த ஜெயந்திநாதர்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் 40 வருடங்களுக்குப் பிறகு கையில் வைர வேலுடன் ஜெயந்திநாதர் கம்பீரமாக காட்சியளித்தார். பக்தர்கள் பரவசமடைந்தனர்.

PT WEB

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலில் வருடத்திற்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆவணி திருவிழா, மாசித் திருவிழா, கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா என பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில், மிக முக்கியமானதாக கந்த சஷ்டி விழா கருதப்படுகிறது.

வைர வேலுடன் காட்சியளித்த ஜெயந்திநாதர்

கந்த சஷ்டி விழா கடந்த 2 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் விமர்சையாக தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து வருகிற 7 ஆம் தேதி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நான்காம் நாளான இன்று யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. அதன் பின்னர் அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து சுவாமி மற்றும் வள்ளி தெய்வானைக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு ஜெயந்தி நாதருக்கு இரண்டு அடி உயரமுள்ள வைரவேல் சார்த்தப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்

இதைக்கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டனர். சண்முக விலாச மண்டபத்திற்கு ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை தங்க சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வருகை தந்தனர். அங்கு தீபாராதனை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.