தமிழ்நாடு

மெரினாவில் போலீஸ் குவிப்பு: சர்வீஸ் சாலை மூடல்!

webteam

சென்னை மெரினாவில் 500-க்கும் அதிகமான போலீசார் இன்று குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு சர்வீஸ் சாலை மூடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதால் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் போல் இளைஞர்கள் இதற்கும் திரள வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து மெரினாவில் போலீசார் நேற்று குவிக்கப்பட்டனர். இருந்தும் பொதுமக்களுடன் கலந்து வந்த போராட்டக்காரர்கள் சிலர் கடற்கரை அருகே வரிசையாக நின்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் பரவியதால் ஏராளமானோர் அங்கு குவியத்தொடங்கினர். அதற்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் மெரினாவுக்கு வருவார்கள். அவர்களோடு போராட்டக் காரர்களும் வர வாய்ப்பிருக்கிறது என்பதால் இன்று அதிகாலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரையில் போராட்டத்தை தடுக்க சர்வீஸ் சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதில் வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்படவில்லை.