தமிழ்நாடு

சுருக்கு கம்பியில் மாட்டிய புலி: பதறிய கிராம மக்கள்

சுருக்கு கம்பியில் மாட்டிய புலி: பதறிய கிராம மக்கள்

webteam

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள உயிலட்டி பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கி கொண்ட புலியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி பகுதியில் பல்வேறு காய்கறித் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. அங்கு உள்ள காய்கறிகளை காட்டிலுள்ள விலங்குகள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிமக்கள் வன விலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே சுருக்கு கம்பிகளை வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அவ்வழியாக வந்த புலி ஒன்று இந்தச் சுருக்கு கம்பியில் மாட்டிக்கொண்டது. இதனையடுத்து புலியின் உறுமல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வன மருத்துவர் கூடலூரில் இருந்து வரவேண்டும் என்பதால் வன அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். மேலும் புலியின் அருகே பொதுமக்கள் யாரும் அருகே செல்லாத வண்ணம் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து பேசிய வனத்துறையினர் மருத்துவர் வந்தப் பிறகு புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்படும் என்றும் அதன் பின்னர் புலி வனப்பகுதிக்குள் விடும் பணியானது நடைபெறும் என்றும் கூறினர்.