தமிழ்நாடு

மிரட்டிய இடி..! மின்னல்..! சென்னையில் நிற்காமல் வெளுத்து வாங்கிய கனமழை!

மிரட்டிய இடி..! மின்னல்..! சென்னையில் நிற்காமல் வெளுத்து வாங்கிய கனமழை!

ச. முத்துகிருஷ்ணன்

சென்னையில் மதியம் 2 மணியளவில் துவங்கிய கனமழை 1.30 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சென்னையில் ஆவடி, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கே.கே.நகர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று மதியம் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் அசோக் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரமாக இடி மின்னலுடன் மழை தொடர்ச்சியாக பெய்ததால் சாலையில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்தனர். சென்னை முழுவதும் பரவலாக பெய்து வரும் இந்த கனமழை அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழையாகவும் ஓரிரு இடங்களில் கனமழையாகவும் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மிதமான மழையாகவும் ஓரிரு இடங்களில் கனமழையாகவும் தொடரும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் 3 மணியளவில் வெளியிட்ட தனது வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.