சென்னை தரமணியில் இடம் பிரச்னை காரணமாக மூன்று பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை தரமணி மகாத்மா காந்தி நகர், அண்ணா தெருவில் வசந்தகுமார், கிருஷ்ணகுமார் சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டிற்கு எதிரே உள்ள 900 சதுர அடி நிலத்தை தந்தை காலத்திலிருந்தே பராமரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் (அண்ணாமலை, பாபு, சீனி, சுப்பிரமணி உள்ளிட்ட 5 பேர்) இவர்களது இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாகவே முயன்று வருவதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் இதுபோன்று பிரச்னை செய்து வருவதாகவும் சகோதரர்கள் குடும்பத்தார் குற்றம் சாட்டினர். இதனிடையே, இன்று காலை சகோதரர்கள் வசத்தில் இருந்து வந்த 900 சதுர அடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய சிலர் வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.“ கடந்த 45 வருடங்களாக எங்கள் பராமரிப்பில் இருந்த இடத்தை அபகரிக்க நினைக்கும் இவர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்வதைவிட, நாங்கள் இறந்தபின்பு இடத்தை அபகரித்துக் கொள்ளட்டும்” என்று கூறி வசந்த்குமார் மனைவி லில்லி, கிருஷ்ணகுமார் மனைவி கேத்ரின் மற்றும் மகள் கல்பனா ஆகிய மூவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இச்சம்பவத்தை பார்த்த அவர்களுடைய உறவினர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தரமணி போலீசார் தற்கொலைக்கு முயன்றவர்களிடம் சமரசம் பேசி, பின்னர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்கள் மீது புகார் கொடுக்கும்படி கூறினர். தொடர்ந்து தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.