அமர்பிரசாத் ரெட்டி PT
தமிழ்நாடு

அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க மூன்று தனிப்படை; டெல்லி, மும்பை, குஜராத் மாநிலங்களில் தேடுதல் வேட்டை!

பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத்தை பிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

PT WEB

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள், பாஜக-வில் மாவட்ட துணைத் தலைவியாகப் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்ததையொட்டி, சித்ரா நகர் பகுதியிலிருந்து ஆட்களை அழைத்து வந்துள்ளார். இதுதொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமர் பிரசாத் ரெட்டி

இதனையடுத்து கடந்த 21-ஆம் தேதி இரவு பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா, மேலும் ஒருவர் என மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரையும், அவரது சகோதரி தேவியையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த தேவியை அவரது உறவினர்கள் மீட்டு தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேவி பயத்தின் காரணமாக இரண்டு நாட்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து தேவியின் உறவினர்கள் அறிவுரையின் படி, அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் மற்றும் பாஜக நிர்வாகி நிவேதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், பா.ஜ.க நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர், நிவேதா மற்றும் கஸ்தூரி உள்ளிட்ட 4 பேர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்ததுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், பா.ஜ.க நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். மேலும் பா.ஜ.க நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க கோட்டூர்புரம் ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மும்பை, டெல்லி, குஜராத் ஆகிய இடங்களில் அமர்பிரசாத்தை தேடி வருகின்றனர்.