மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் உட்பட 13 பேர் சாம்ராஜ்நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கணக்கம் பாளையத்தை சேர்ந்த 15 பேர் வேன் மூலமாக மைசூருக்கு இன்று அதிகாலை புறப்பட்டனர். திம்பம் மலைப்பாதை வழியாக சென்ற வேன், இரு மாநில எல்லையான செர்ணாவதி அணை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப்பணி நடந்து வரும் நிலையில், லேசான சாரல் மழையும் பெய்துள்ளது.
அப்போது மூடுகள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த வேன் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் சுப்பிரமணியம் (70), அவரது மனைவி அமராவதி (65), மற்றும் கோகிலா (42) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த கிராம மக்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கர்நாடக ஆம்புலன்ஸ் மூலம் சாம்ராஜ்நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வேன் ஓட்டுநர் அருண் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து சாம்ராஜ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.