தமிழ்நாடு

சேலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூர கொலை: போலீசார் விசாரணை

சேலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூர கொலை: போலீசார் விசாரணை

webteam

சேலத்தில் கணவன் மனைவி உள்பட 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் திருமலைகிரி அடுத்துள்ள செம்மண்திட்டு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சொந்தமாக வெள்ளிப்பட்டறை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அவரது வெள்ளி பட்டறையில் ஒரு வாரத்திற்கு முன் ஆக்ராவைச் சேர்ந்த ஆகாஷ்(26), அவரது மனைவி வந்தனா(21) மற்றும் ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி(18) ஆகியோர் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் மூவரும் தங்கராஜ் வீட்டின் அருகில் அவருக்கு சொந்தமான மற்றொருவீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். ஆகாஷ்-வந்தனா தம்பதிக்கு 10 மாத ஆண்குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் ஆகாஷின் வீடு வெளிப்பக்கம் தாழிடப்பட்டிருந்த நிலையில் வீட்டிற்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து பக்கத்து வீட்டிலிருந்த பெண், ஆகாஷின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். உள்ளே வந்தனா ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் வீட்டிற்கு பின்புறம் ஆகாஷ் மற்றும் சன்னி ஆகியோரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை ஆக்ராவில் இருந்து வந்த வினோத் உள்ளிட்ட 4 பேரும் தங்கராஜின் வெள்ளிப்பட்டறையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் ஆகாஷ் தங்கியிருந்த வீட்டின் எதிரே இருந்த வீட்டில் தங்கியுள்ளனர். ஞாயிறு விடுமுறை என்பதால் ஆகாஷ் மற்றும் வினோத் நண்பர்கள் அனைவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

நான்கு பேரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் ஆக்ராவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்பதால் அவர்களைத் தேடி தனிப்படை போலீசார் ஆக்ரா விரைந்துள்ளனர்.