தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்.... 3 நாளில் நடந்தது என்ன ?

jagadeesh

கலைவாணர் அரங்கத்தில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் முடிவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை வரலாற்றிலே இல்லாத வகையில், மிக குறைந்த அளவில் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இந்த முறை கலைவாணர் அரங்கத்தில் பேரவை கூட்டத் தொடர் கூட்டப்பட்டது. முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாவது நாளில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலைக்கு யார் காரணம் என்ற விவாதம் காரசாரமாக நடைபெற்றது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்குவது என இந்தக் கூட்டத் தொடரில் மொத்தமாக 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத் தொடரில் கிசான் முறைகேடு, அரியர் ரத்து விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. ப.சிதம்பரத்தின் மனைவி பெயரை குறிப்பிட்டு அதிமுக உறுப்பினர் இன்பதுரை பே‌சியதால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மூன்று நாள் நடந்த கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.