ஆம்ஸ்ட்ராங்கின் அலுவலகத்துக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பிய கடிதத்தில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது குழந்தையை கடத்த உள்ளதாகவும், குடும்பத்தினர் அனைவரையும் குண்டுவீசி கொலை செய்ய உள்ளதாகவும் கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய இரண்டு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சுழற்சி முறையில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே கொலை மிரட்டல் தொடர்பாக ஐயத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.