தமிழ்நாடு

“நிவாரணத்தை உயர்த்தி தரவேண்டும்” - விவசாயிகள் கோரிக்கை

“நிவாரணத்தை உயர்த்தி தரவேண்டும்” - விவசாயிகள் கோரிக்கை

webteam

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் கூப்பாச்சிக்கோட்டையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இந்த கஜா புயலால் தஞ்சை உள்ளிட்ட  மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. 

பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் வாழ்வாதாரமாக விளங்கிய தென்னை மரங்கள் சீரழிந்து கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது இருக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தப்பகுதிகளில் இருந்து தேங்காய்கள் மற்றும் தென்னை மரங்கள் சார்ந்த பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் அதிகமான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதால் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படும் தென்னை சார்ந்த பொருட்களின் விலை உயரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

அதிக அளவில் தென்னை சாகுபடி செய்து வரும் முத்துப்பேட்டை, மன்னார்குடி ஆகிய பகுதி விவசாயிகளும் தற்போது செய்வதறியாது தவித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கூப்பாச்சிக்கோட்டையில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய இழப்பு என்பதால் விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர். 

இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடும் இவர்கள், தற்போது அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி தரவேண்டும் என்கின்றனர். மீண்டும் கனமழையால் திக்கற்று நிற்கும் விவசாயிகள் மானிய விலையில் தென்னங்கன்று வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்