தமிழ்நாடு

நேரு விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் வாங்க காத்திருந்தவர்கள் இரவில் தர்ணா போராட்டம்

நேரு விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் வாங்க காத்திருந்தவர்கள் இரவில் தர்ணா போராட்டம்

kaleelrahman

சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மருந்து வாங்க காத்திருந்தவர்கள் நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து இனிமேல் தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. எனவே சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று முதல் மருந்து விநியோகம் செய்யப்படாது எனவும் கூறியுள்ளது.

ஆனால், நேற்றிரவு முதலே ஏராளமானோர் மருந்து வாங்க நேரு விளையாட்டு அரங்கு முன்பு காத்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு மருந்து வழங்கவேண்டும் என வலியுறுத்தினர். காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துசெல்ல அறிவுறுத்திய நிலையில், நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களை அப்புறப்படுத்தி நேரு விளையாட்டு அரங்கம் செல்லும் பிரதான சாலைகளை தடுப்புகள் மூலம் காவல்துறையினர் அடைத்தனர். இருப்பினும் சிலர் ரெம்டெசிவிர் மருந்துக்காக தொடர்ந்து காத்திருக்கின்றனர்.