தமிழ்நாடு

"இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" சரத்குமார்

"இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" சரத்குமார்

jagadeesh

இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைதுச் செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூ-டியூப் சேனலில் இந்து மதத்தை சேர்ந்த கடவுள்களையும், இந்த மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் பகிரப்படுவதாக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ‘கறுப்பர் கூட்டம்’ யூ-டியூப் சேனல் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை வேளச்சேரியில் கைது செய்தனர். பின்னர், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் "பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வருகின்ற கலாசாரம், தெய்வ வழிபாடு, நம்பிக்கை, இவைகளைக் கொச்சைப் படுத்துவர்களுக்கு கொடுக்கின்ற தண்டனை இனி ஆண்டாண்டு காலத்திற்கு எந்த அறிவு மூடர்களும் வாய் திறவாமல் நம் ஹிந்துக்கடவுள்களை விமர்சிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும்"

மேலும் "கனவில்கூட அவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது, தப்பித் தவறி கனவில் வந்தால் உடனே எழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும். எந்த மதத்தையும் இழிவு படுத்தக்கூடாது என்ற எண்ணத்தோடு அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நம்மிடையே பிரிவினை என்ற விஷத்தை விதைப்பவர்கள் இவர்கள். ஒரு வாதத்திற்கு கேட்கிறேன் இந்தக் கறுப்பர் மந்தைகள் மற்ற மதத்தை அந்த மதப் போதனைகளை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா? ஹிந்துக்களை, ஹிந்துமதத்தை இழிவுபடுத்தினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்று தொடர்ந்து விமர்சிக்கின்ற கூட்டத்தைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாடம் புகட்டவேண்டும். விளம்பரம் தேடுபவர்கள் ஒடுக்கப்பட்ட வேண்டும்" என சரத்குமார் தெரிவித்துள்ளார்.