ஸ்னோலினின் தாயார் pt desk
தமிழ்நாடு

‘விஜய் எங்களுக்காக வந்து நின்னாரு’ - தவெகவில் இணைந்த ஸ்னோலின் தாய் உருக்கமாக சொன்ன வார்த்தை!

மிகவும் எளிமையாக வந்து எங்கள் கஷ்டத்திலும், வேதனையிலும் பங்கெடுத்த நடிகர் விஜயை 2026ல் தமிழக முதல்வராக அரியணையில் அமர்த்துவோம் என்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாயார் கூறினார்.

PT WEB

செய்தியாளர்: ராஜன்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் அந்த மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் பலரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் அவர்களின் தாயார்

அந்தவகையில் அன்று நடிகராக இருந்த இன்றைய தவெக தலைவர் விஜய் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பகலில் சென்றால் ரசிகர்கள் கூடக்கூடும் என்பதால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகையும் வழங்கினார். இதில், ஸ்னோலின் குடும்பமும் அடங்கும்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியில், ஸ்னோலின் குடும்ப உறுப்பினர் அனைவரும் இணைந்துள்ளனர். இதுகுறித்து, உயிரிழந்த ஸ்னோலினின் தாயார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “அனைவரும் ஸ்னோலின் மறைவு குறித்து வேதனையுடன் வீட்டின் வாயிலில் அமர்ந்திருந்தோம். அப்போது திடீரென விஜய் வந்தார். எங்களுடன் சமமாக அமர்ந்து எங்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார். மிகவும் துயரப்பட்டார். ‘தொந்தரவு செய்திருந்தால் எங்களை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்’ என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் அவர்களின் தாயார்

மிகவும் எளிமையாக வந்து எங்கள் துக்கத்தில் பங்கெடுத்து போய்விட்டார். இந்த மகன் என்ற அவர், கடந்த தினத்தில் மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு கடிதம் ஒன்றை கொடுப்பதற்கு நினைத்தேன்.. ஆனால், அங்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இருந்ததால் என்னால் கடிதத்தை கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை.. தற்போது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்சியில் உறுப்பினராகி விட்டோம்.. மேலும் 2026-ல் விஜயை முதலமைச்சராக அரியணையில் அமர்த்தவோம் என்று கூறினார்.