தூத்துக்குடி சாதிச் சண்டை புதிய தலைமுறை
தமிழ்நாடு

தூத்துக்குடி: போதையில் ஆம்லெட்டுக்காக ஆரம்பித்த ரகளை; சாதிச் சண்டையாக மாறி அடிதடியில் முடிந்த அவலம்

PT WEB

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள பி.ஜெகவீரபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராமமூர்த்தி என்பவர் புதூரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கீழக்கரந்தையைச் சேர்ந்த ராமர், திருமேணிச்சாமி என்ற இளைஞர்கள் இருவர் சாப்பிடுவதற்காக அந்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர்.

மிகுந்த மதுபோதையில் இருந்த இளைஞர்கள் ஹோட்டலில் ஆம்லெட், ஆப்ஆயில் என 10 முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டுள்ளனர். ஆனால், ’பணம் கொடுக்கும்போது 4 முட்டைகள் மட்டும்தான் சாப்பிட்டோம்’ என்று கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஹோட்டலில் இருந்த பாத்திரங்களை தூக்கி வீசியதுடன் ஹோட்டல் உரிமையாளர் மனைவியையும் தரக்குறைவாகப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து வெளியேறிய அவர்கள், வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஜாதி ரீதியாகப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் இது, ஜாதி பிரச்னையாக மாறியதையடுத்து, இரு தரப்பிலும் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த புதூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று சண்டையை தடுத்து நிறுத்தினர்.

மேலும் அவர்கள், இதில் பலத்த காயமடைந்தவர்களைச் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் புதூர் காவல் நிலைய போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.