தமிழ்நாடு

அருவியில் விழுந்த குழந்தையை மீட்ட இளைஞருக்கு தூத்துக்குடி ஆட்சியரின் நெகிழ வைத்த உதவி!

அருவியில் விழுந்த குழந்தையை மீட்ட இளைஞருக்கு தூத்துக்குடி ஆட்சியரின் நெகிழ வைத்த உதவி!

webteam

குற்றாலத்தில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட குழந்தையை விளாத்திகுளத்தை சேர்ந்த இளைஞர் முத்துக்குமார் என்பவர் காப்பாற்றிய நிலையில், அவரை ஊக்குவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்த நெகிழ்ச்சி சம்பவம் எல்லோரது பாராட்டையும் பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (24). இவர் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு குற்றாலம் சென்றுள்ளார். அங்கு கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஹரிணி என்ற குழந்தை, தனது குடும்பத்தினருடன் குற்றால அருவியில் குளித்தபோது, தண்ணீரில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டு பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார்.

குழந்தை தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை பார்த்த விஜயகுமார், உடனடியாக செங்குத்தான பள்ளத்தாக்கில் குதித்து, பலத்த நீரோட்டத்தில் தத்தளித்த குழந்தையை தூக்கிக்கொண்டு, சில நிமிடங்களில் பாதுகாப்பாக மேலே ஏறி வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் தங்களது தொலைபேசியில் விஜயகுமார் அந்த குழந்தையை துணிச்சலாக காப்பாற்றும் வீடியோவை எடுத்தனர். அந்தக் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவை பார்த்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், குழந்தையை காப்பாற்றிய விஜயகுமாரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிலையில் ஓட்டுநர் விஜயகுமார் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜிடம், “எனக்கு வாகனம் ஓட்ட அனைத்து உரிமங்களும் இருக்கின்றது, ஆனால் என் வேலைக்கு தகுந்த ஊதியம் என்பது கிடைப்பதில்லை, ஆகையால் எனக்கு வாகனம் ஓட்டுவதற்கு வேலை ஒன்றில் பணியமர்த்தி தந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்” என கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் ஆட்சியர் செந்தில் ராஜ், விஜயகுமாரை தனது காரின் டிரைவராகவே பணியமர்த்திக் கொண்டார்.

மேலும் விஜயகுமாருக்கு புது வெண்ணிற ஆடை மற்றும் ஷூ ஆகியவற்றை தனது சொந்த பணத்திலேயே மாவட்ட ஆட்சியர் வாங்கிக் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒட்டி வந்த இளைஞர் விஜயகுமார், இந்த பணியை மாவட்ட ஆட்சியர் தனக்கு தந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். அருவியில் விழுந்து தவறிய சிறு குழந்தையை காப்பாற்றிய இளைஞரை தனது வாகன ஓட்டியாக அமர்த்திய மாவட்ட ஆட்சியரை, அனைவரும் பாராட்டியவண்ணம் உள்ளனர்.