தமிழ்நாடு

தூத்துக்குடி: விளையாட செல்போன் தராததால் 13 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி: விளையாட செல்போன் தராததால் 13 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை

kaleelrahman

விளாத்திகுளம் அருகே, தாய் செல்போன் தராததால் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிமுருகன், ஜோதிமணி தம்பதிக்கு மதன் (16), பாலகுரு (13) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள், தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். வழக்கமாக மதன் மற்றும் பாலகுரு இருவரும் தங்களது பெற்றோர்களின் செல்போன்களை வாங்கி விளையாடுவது வழக்கம். இதனால் அண்ணன் தம்பிகள் இருவருக்கும் இடையே அடிக்கடி செல்போனுக்காக சண்டை வரும் எனத் தெரிகிறது.


இந்நிலையில் இன்று காலை மதன் பள்ளிக்கு சென்றுவிட சீனிமுருகனும் வேலைக்கு சென்று விட்டார். ஜோதிமணி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு கிளம்பியுள்ளார். அப்போது பாலகுரு தானும் திருமண நிகழ்ச்சிக்கு வருவதாக கூறியுள்ளார். வேண்டாம் வீட்டில் இரு என ஜோதிமணி கூறியவுடன் அப்படியானால் செல்போனை தரும்படி கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜோதிமணி, சாப்பிட்டு விட்டு வீட்டில் இரு. வெளியில் சென்று விளையாடக்கூடாது என்று கூறி விட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து திருமண நிகழ்ச்சி முடிந்து ஜோதிமணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாலகுரு தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். ஜோதிமணியின் அழுகுரலை கேட்ட அருகில் இருந்தவர்கள் விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் தனது தாய் செல்போன் தரவில்லை, தன்னையும் அழைத்து போகவில்லை என்ற காரணத்தால் பாலகுரு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தாய் செல்போன் தரவில்லை என்பதற்காக சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.