கேரளாவை சேர்ந்த மனிஷா என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி வந்துள்ளார். கர்ப்பிணியான இவருக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் திடீரென காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதோடு, திடீரென சுயநினைவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தி மூலம் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
அப்போது அங்கு உடனடியாக மகப்பேறு மருத்துவமனையில் உள்ள பிரசவ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை, மகப்பேறு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். கடுமையான மூளைக்காய்ச்சல், மூளை அழற்சி, சுவாச செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை, `பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு பிரிவில்’ அனுமதிக்கப்பட்டு 14 நாட்கள் பராமரிக்கப்பட்டது. பிரசவத்திற்கு பின் தாய் மனிஷா மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு மருத்துவ குழுவால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தார். 33 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்பு தற்போது தாயும் சேயும் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “தொடர் சிகிச்சையின் காரணமாகவே தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முடிந்தது. பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தாய் கண்காணிக்கப்பட்டு, இதற்காக ஒவ்வொரு குழு தலைவர்கள் மற்றும் குழுவில் பணியாற்றிய இள மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.
இதுகுறித்து துறைத் தலைவர் மருத்துவர் வெங்கடேஸ்வரி கூறுகையில், ''இதுபோன்ற பிரச்சனை கர்ப்பிணிக்கு வருவது அரிதிலும் அரிதானது. பத்தாயிரத்தில் ஒருவருக்கே இது போன்று நடக்கும். இம்மாதிரியான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்'' என்று கூறினார்.