தமிழ்நாடு

ஆளுநரின் தேநீர் விருந்தில் இதற்காக தான் பங்கேற்றேன் - விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின்!

ஆளுநரின் தேநீர் விருந்தில் இதற்காக தான் பங்கேற்றேன் - விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின்!

webteam

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்கலாமா, இது அரசியல் பின்வாங்கல் இல்லையா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு உங்களில் ஒருவன் பதிலில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தேநீர் விருந்தில் பங்கேற்றது அரசியல் பின்வாங்கல் இல்லை என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் பதிலளித்து பேசுகையில், சட்டப்பேரவையில் தமிழக ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அன்று அவர் படித்தது அரசின் உரை, ஆகவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை எந்த மாற்றமும் இல்லாமல் அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதே என்னுடைய தீர்மானம். தீர்மானம் ஏற்கப்பட்டதால் அவையின் மாண்பும், மக்களாட்சி தத்துவமும் நிலைநாட்டப்பட்டது.

சட்டபேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலளித்து நான் பேசியபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ள ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், 100 ஆண்டுகளை கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களை போற்றவும், நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன் என்று குறிப்பிட்டேன் அவ்வளவே. அதையே தான் நான் இப்போதும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் குடியரசு நாள் தேநீர் விருந்து என்பது காலங்காலமாக இருந்து கொண்டிருக்கும் நடைமுறை மரபு, குடியரசு நாளன்று அந்த விருந்தில் பங்கேற்றது, மக்களாட்சியின் மாண்பை காப்பதற்காக மட்டும் தான். இதில் எந்த அரசியல் பின்வாங்கலும் இல்லை, முன்வாங்கலும் இல்லை, எந்த சமரசமும் இல்லை என தெரிவித்துகொண்டார்.