தமிழ்நாடு

"பள்ளிகள் திறப்பதற்கு இதுவே சரியான நேரம்" - உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி

webteam

பள்ளிகளை திறப்பதற்கு இதுவே சரியான நேரம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் நிலையில், 'துளிர்க்கும் நம்பிக்கை' என்ற தலைப்பில் புதிய தலைமுறை மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறியாள்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தியாகராயர் குழும தலைவர் கருமுத்துக்கண்ணன், ZOHO சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு, KISSFLOW சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம், பிஜிபி குழுமத் தலைவர் பழனி ஜி.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் “கொரோனா தொற்று குறைந்து வருவதால், பள்ளிகள் திறப்பதற்கு இதுவே சரியான நேரம். பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம். ஆன்லைன் வகுப்புகள் எங்கு முடியுமோ அங்கு அதை செய்யலாம். உலகம் முழுவதும் 2021ஆம் ஆண்டுக்குள் 20 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரியில் ஜனவரியில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளை இந்த மாதமே திறக்கிறோம். இந்த கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கு கொடுப்பதாக கூறியுள்ளது. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், அதற்காக காலம் தாழ்த்தாமல் மாநில அரசே அதற்கான நிதியை உருவாக்கி கண்டிப்பாக மக்களுக்கு கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு குறைந்துவந்தாலும், மக்கள் அஜாக்கிரதையாக இருக்காமல், நோய்த் தொற்று தொடர்பாக அரசு கூறும் வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் அறிவுறுத்தினர்.